காவல் துறையினர், சீருடைப் பணியாளர்கள் 134 பேருக்கு அண்ணா பதக்கம்

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
காவல் துறையினர், சீருடைப் பணியாளர்கள் 134 பேருக்கு அண்ணா பதக்கம்

தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத் துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி இந்த ஆண்டு, காவல் துறையில் 2-ம் நிலை காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பதக்கம் வழங்கப்படுகிறது. இதேபோல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீயணைப்பு வீரர் முதல் மாவட்ட அலுவலர் நிலை வரையிலான 8 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், சிறைத் துறையில் முதல்நிலை சிறைக்காவலர் முதல் நிலை சிறை கண்காணிப்பாளர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் பதக்கம் வழங்கப்படுகிறது. மேலும், ஊர்க்காவல் படையில் உதவி படைத் தளபதி முதல் வட்டாரத் தளபதி வரையிலான 5 ஊர்க்காவல் படை அலுவலர்களுக்கும், விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறை பிரிவில் இளநிலை அறிவியல் அலுவலர் மற்றும் துணை இயக்குநர் ஆகியோருக்கும், அவர்களின் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் ‘மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள்’ வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

மேலும், தமிழக முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான தீயணைப்புத் துறை பதக்கம் மற்றும் தலா ரூ.5 லட்சம் பண வெகுமதி, 14.11.2020 அன்று மதுரையில் உள்ள சஞ்சய் டெக்ஸ்டைல் என்ற நிறுவனத்தில், நிகழ்ந்த தீ விபத்தில் இருந்து பல மனித உயிர்களையும், சொத்துகளையும் காப்பாற்றியபோது, கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கி தங்கள் உயிரைத் தியாகம் செய்த தீயணைப்பு வீரர்கள் கு.சிவராஜன் மற்றும் பெ.கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவர் உட்பட 7 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வீரர்களுக்கு அவர்கள் ஆற்றிய வீரதீர செயல்களுக்காக வழங்கப்படுகிறது.

மேற்கண்ட பதக்கங்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.