சென்னையில், தலைக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை 86 சதவீதமாக உயர்வு

சென்னையில், தலைக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை 86 சதவீதமாக உயர்வு

போக்குவரத்துக் காவலர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வால் விளைந்த பலன்

சென்னையில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்கதையாகிவிட்டன. கடந்த ஜனவரி 1 முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை நடந்த சாலை விபத்துகளில் சிக்கி 659 பேர் உயிரிழந்ததாகவும், 3,325 பேர் காயமடைந்ததாகவும் போக்குவரத்துக் காவல் துறையினர் தெரிவிக்கிறார்கள்.

இதில் இருசக்கர வாகன விபத்துகளில் சிக்கி 173 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இவர்களில் 125 பேரின் மரணத்துக்குக் காரணம், தலைக்கவசம் அணியாததுதான். அதேபோல், இருசக்கர வாகன விபத்துகளில் காயமடைந்த 1,214 பேரில், 1,056 பேர் தலைக்கவசம் அணியாதவர்கள்தான்.

இதைத் தொடர்ந்து தலைக்கவசம் அணிவதை வாகன ஓட்டிகள் எவ்வாறு கடைப்பிடிக்கின்றனர் என்பது குறித்த ஆய்வு, கடந்த ஜூன் மாதம் போக்குவரத்துக் காவல் சார்பில் நடத்தப்பட்டது. 10 முக்கியச் சந்திப்புகளில் நடைபெற்ற இந்த ஆய்வில் 72 சதவீத நபர்கள் மட்டுமே தலைக்கவசம் அணிவது தெரியவந்தது.

இதையடுத்து, தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒருபுறம், போக்குவரத்து விதிகளை மீறியதாக 3,58,548 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 1,29,240 வழக்குகள் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்கள் மீது பதிவுசெய்யப்பட்டன. மறுபுறம், தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி புதுமையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

இந்த முயற்சிகள் நல்ல பலனைத் தந்திருக்கின்றன என்கிறார்கள் போக்குவரத்துக் காவல் துறையினர். தலைக்கவசம் அணிவது 72 சதவீதத்திலிருந்து 86 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ‘பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே, 100 சதவீதம் தலைக்கவசம் அணிந்து விபத்துகளைத் தடுக்க முடியும்’ என சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.