முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதில் தாமதம்: நடிகை புகார்

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதில் தாமதம்: நடிகை புகார்
அதிமுக முன்னாள் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன்

தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றி கருக்கலைப்பு செய்ததாக அதிமுக முன்னாள் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் மீது திரைப்பட நடிகை ஒருவர் புகார் அளித்திருந்தார். அப்புகாரின் பேரில் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் பலாத்காரம் உட்பட 6 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மணகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து அவர் சிறையிலிருந்து வெளியே வந்தார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (செப்.16) மனு ஒன்றை அளித்துள்ளார். ராஜகோபாலன் வழக்கு, சிவசங்கர் பாபா வழக்கு என அனைத்துப் பாலியல் வழக்குகளிலும் போலீஸார் உடனடியாகக் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்; ஆனால் தனது வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்குச் செல்லாமல் தேங்கி கிடப்பதாக மனுவில் நடிகை குறிப்பிட்டுள்ளார். இதனால் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கின் குற்றப்பத்திரிகையை உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டுமென காவல் ஆணையரிடம் அளித்த புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாலியல் வழக்கில் 90 நாட்களுக்குள் காவல் துறையினர் விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். செப்டம்பர் 18-ம் தேதியுடன் 90 நாட்கள் நிறைவடைய இருப்பதால் நடிகை மனு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தான் 3 முறை சட்டவிரோதமாகக் கட்டாயக் கருக்கலைப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவர் அருணின் மருத்துவ அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலுக்கும் நடிகை மனு அளித்துள்ளார். அமைச்சர் மணிகண்டனும் எம்பிபிஎஸ் படித்த மருத்துவர் என்பதால் அவரது மருத்துவ அங்கீகாரத்தையும் ரத்து செய்ய நடிகை கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.