காந்தியடிகளின் ஆடைப் புரட்சி நூற்றாண்டு தருணத்தில் தலைவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்

உயர் நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி வேண்டுகோள்
காந்தியடிகளின் ஆடைப் புரட்சி நூற்றாண்டு தருணத்தில் 
தலைவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்
காந்தியடிகளின் அரை ஆடைப் புரட்சி நூற்றாண்டு விழா மலரை உயர் நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி வெளியிட்டபோது...

‘‘காந்தியடிகளின் ஆடைப் புரட்சி நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் இந்நாளில், அரசியல்வாதிகள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்று உயர் நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி கூறியிருக்கிறார்.

மதுரை காந்தி அருங்காட்சியத்தில் காந்தியடிகளின் அரை ஆடைப் புரட்சி நூற்றாண்டு விழா, இன்று (செப்.22) மாலை நடந்தது. மதுரை காந்தி அருங்காட்சியகத்தின் தலைவர் ம.மாணிக்கம் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். டெல்லி தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குநர் அ.அண்ணாமலை வரவேற்றார். விழாவில் காந்தியடிகளின் அரை ஆடைப் புரட்சி நூற்றாண்டு விழா மலரைச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி வெளியிட, டெல்லி காந்தி அமைதி நிறுவனத்தின் தலைவர் குமார் பிரசாத் பெற்றுக்கொண்டார்.

காந்தியடிகள் மற்றும் ராஜாஜியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்ஜி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நூற்றாண்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் நீதிபதி பி.புகழேந்தி பேசியதாவது:

“காந்தியடிகள் மக்களுக்காகத் தனது ஆடையைத் துறந்த நாளை ஆடைப் புரட்சி நாள் என்று கூறுகிறோம். ஆடை ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைத் தேவையானது. உணவு, உறைவிடம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமானது. வழக்கறிஞர்களைப் பொறுத்தவரையில் ஒரு டிரஸ் கோடு (Dress Code) உண்டு. நீதிமன்றத்தில் சாதாரண ஆடையில் வழக்கறிஞர்கள் வழக்காட முடியாது. கழுத்தை நெருக்கி ஒரு பட்டன் போட்ட சட்டை, அதற்கு மேல் கோட், அங்கி, காலில் ஷூ போன்ற ஆடை அலங்காரங்களுடன்தான் நீதிமன்றத்தில் வழக்காட முடியும். பிரிட்டிஷ் ஆட்சியில் பின்பற்றப்பட்ட இந்த ஆடை நடைமுறை இன்னமும் தொடர்கிறது.

காந்தியடிகளும் வழக்கறிஞராக இருந்தவர். அவரும் இப்படித்தான் ஆடைகளை அணிந்திருந்தார். தமிழர்களுக்கு எப்படி வேஷ்டி, சட்டை பாரம்பரிய ஆடையோ, அதுபோல காந்தியடிகளுக்கும் அவர்களுடைய பாரம்பரிய ஆடையான குர்தா, தலைப்பாகையும் மிக மிக அழகாக இருந்திருக்கும். அப்படிப்பட்ட ஆடம்பரமான ஆடைகளையெல்லாம் துறந்துவிட்டு ஒரு சாதாரண அரை வேஷ்டியும், துண்டும் கட்டிக்கொண்டு தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இருந்தார் என்றால் அதை நாம் புரட்சி என்று சொல்வதா அல்லது அதை அவருக்கு அவரே விதித்துக்கொண்ட தண்டனை என்று சொல்வதா? அவர் எடுத்த இந்த முடிவுக்குக் காரணம், மதுரையில் அவர் பார்த்த மக்கள். ‘மேலாடை அணியக்கூட முடியாத இந்த மக்கள் இருக்கும்போது எனக்கு எதற்கு இந்த ஆடம்பர ஆடை?’ என்று அவர் தன்னுடைய ஆடைகளைத் துறந்தார். ‘ஒரு தலைவனாக என்னால் என் மக்களுக்கு ஒரு நல்ல ஆடையை வழங்க முடியாது என்றால், இப்படிப்பட்ட ஆடைகளுடன் அவர்கள் இருக்கும்போது எனக்கு எதற்கு ஆடம்பர ஆடை?’ என்று அந்த முடிவை எடுத்தார்.

உலகளவில் எந்த ஒரு தலைவருக்கும் இப்படி ஒரு சிந்தனைகூட வந்திருக்க முடியாது. இப்படிப்பட்ட ஒரு முடிவை அவர்கள் எடுத்திருக்க மாட்டார்கள். காந்தியின் எண்ணங்கள் அப்படி இருந்ததால்தான் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் அவர் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இன்று அரசியல் கூட்டங்கள் எல்லாம் எப்படி நடந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு கூட்டங்களுக்கு எப்படி ஆட்கள் அழைத்து வருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இன்று இருக்கும் அறிவியல் புரட்சியில் செல்போன், மின்னஞ்சல், வாட்ஸ்-அப் போன்ற தகவல் தொழில்நுட்பங்கள் மிக பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளன. இந்த வளர்ச்சியில் ஒரு தகவலை, செய்தியை உலகின் எந்தப் பகுதிக்கும் எளிதாகக் கொண்டு செல்ல முடியும். அப்படியிருந்தும் கூட்டத்திற்கு ஆட்கள் வருவது என்பது எளிதான காரியம் இல்லை. ஆனால், எந்த ஒரு வசதியும் இல்லாத அன்றைய நாளிலே காந்தியடிகள் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் திரண்டது. அவர் இந்தியாவில் ஏதோ ஒரு மூலையில் உண்ணாவிரதம் இருக்கிறார் என்றால் அவரைப் பின்பற்றி நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் மக்கள் உண்ணாவிரதம் இருப்பார்கள். அப்படியென்றால் அவர் எப்படிப்பட்ட ஆளுமை மிக்க மனிதராக இருந்திருக்க முடியும். நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது!

ஒரு தலைவன் தன்னுடைய மக்களுடைய நிலைக்குத் தன்னைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும். அவர்களுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காகத் தனக்குத்தானே காந்தி கொடுத்துக்கொண்ட தண்டனையாக இந்த ஆடைப் புரட்சியை நான் கருதுகிறேன். இந்த நாள் ஒவ்வொரு அரசியல்வாதியும் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய முக்கியமான நிகழ்வு. இந்த நாள் இந்த நூற்றாண்டு விழாவோடு முடிந்துவிடக் கூடாது. அடுத்த ஆண்டு இதே விழாவை இன்னும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.

இன்றும் ஆடையைக் கொண்டே மனிதன் மதிக்கப்படுகிறான். பக்கிங்ஹாம் அரண்மனையில் டிரஸ் கோடைப் பின்பற்றாமல் யாரும் ராணியைச் சந்திக்க முடியாது. அன்றைய காலத்தில் காந்தியடிகள் அரண்மனைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், அவரோ தன்னோட ஆடை நிலையை மாற்றிக்கொள்வதில்லை என்று உறுதியாக இருந்தார். அவருக்காக பக்கிங்ஹாம் அரண்மனையின் சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டன. இதுதான் அவருடைய வலிமை. ஆத்ம பலம். ஆடைகளோ அலங்காரங்களோ அவருக்கு அந்த கவுரவத்தைக் கொடுத்துவிடவில்லை. அவர் வாழ்ந்த வாழ்க்கை நெறிமுறைதான் அவருக்கு அந்த மரியாதையைத் தேடிக் கொடுத்தது.”

இவ்வாறு நீதிபதி பி.புகழேந்தி பேசினார்.

மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் பேசும்போது, ‘‘காந்தியடிகளின் எளிமைதான் பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது. அவரது ஆடை மாற்றம், சுதந்திரப் போராட்ட காலத்தில் ஒட்டுமொத்த நாட்டையும் ஒருங்கிணைக்க அவருக்கு உதவியது. இந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் இந்த நேரத்தில் நான் மதுரை மாவட்ட ஆட்சியராக இந்த விழாவில் பங்கேற்பதை மிகப்பெரிய புண்ணியமாகக் கருதுகிறேன். அதுவும், காந்தியடிகளின் பேத்தி அமர்ந்திருக்கும் மேடையில் நானும் இருக்கிறேன் என்பதை இறைவன் எனக்குக் கொடுத்த கொடையாகக் கருதுகிறேன். காந்தியடிகளின் எளிமை பற்றிச் சொன்னால் எதிர்கால சந்ததியினர் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்குத்தான் அவரது வாழ்க்கை முறை அமைந்திருந்தது. இன்று பேச்சு ஒன்றாக உள்ளது. செயல் வேறொன்றாக உள்து. ஆனாலும், காந்தியடிகளின் சொல்லிலும், செயலிலும் ஒரே மாதிரி வாழ்ந்து காட்டியுள்ளார். அவரின் தன்னம்பிக்கைதான் அவர் எடுத்த முடிவுகளில் இருந்து அவரைப் பின்வாங்க விடாமல் தொடர்ந்து செயல்பட வைத்துள்ளது. அவர் சுதந்திரத்திற்கு மட்டமல்லாது கல்வி, காலநிலை மாற்றம் உள்ளிட்டவற்றிலும் மிகப்பெரிய அளவில் தொண்டாற்றியுள்ளார். அவரது சிந்தனைகள் உலக நாடுகள் கடைப்பிடிக்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கின்றன” என்றார்.

காந்தியடிகள் மற்றும் ராஜாஜியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்ஜி பேசும்போது, ‘‘காந்தியடிகள் சிறந்த நிர்வாகியாகவும், தலைவராகவும் இருந்துள்ளார். அவருடைய சிந்தனைகள், எண்ணங்களை அடுத்த தலைமுறையினரான குழந்தைகளுக்குக் கடத்த வேண்டும். அதை அரசாங்கம் செயல்படுத்த உறுதி எடுக்க வேண்டும். ஆண், பெண் என்ற வேறுபாடில்லாமல் அனைவருக்கும் சரிசமமாகக் கல்வி வழங்க வேண்டும். அப்படியொரு சமூகம் ஏற்பட்டால் மட்டுமே சமூக நிதி கிடைக்கும்’’ என்றார்.

Related Stories

No stories found.