ஒரேநாளில் ஒன்றரை லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

வரும் ஞாயிறன்று கோவையில் சிறப்பு முகாம்கள்
ஆட்சியர் சமீரன் கூட்டம்
ஆட்சியர் சமீரன் கூட்டம்

வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 12), ஒரேநாளில் மாபெரும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தி சுமார்1.5 லட்சம் பேருக்கு கோவை மாவட்டத்தில் தடுப்பூசி போடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இந்தச் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் எஸ்.சமீரன் தலைமையில் கோவை ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் லீலாஅலெக்ஸ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தனியார் மருத்துவமனை மருத்துவர்களும், செவிலியர் பயிற்சிக்கல்லூரி முதல்வர்களும், தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் பணியினை மேலும் விரைந்து செயல்படுத்தும் வகையிலும் அனைத்து தரப்பினரும் கரோனா தடுப்பூசியினை விரைந்து பெற்றுக்கொள்ள ஏதுவாகவும், மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று மாபெரும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் மாவட்ட முழுவதும் நடைபெறவுள்ளது. இம்முகாமானது காலை 7 முதல் மாலை 7 மணி வரை நடைபெறும். மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ள பகுதிகள், மலைப்பகுதிகள், போக்குவரத்து வசதியற்ற பகுதிகள், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. இம்முகாமில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், 2-ம் தவணை பெறத் தகுதியுள்ள நபர்களும் தவறாமல் கலந்துகொண்டு பயனடையலாம். கோவை மாவட்டத்தில் 1500 முகாம்கள் மூலம் சுமார் 1.5 லட்சம் மக்கள் தடுப்பூசிகள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in