சென்னையில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை திருட்டு

ரூ.5 லட்சம் அரசு காப்பீடு வாங்கி தருவதாகச் சொல்லி மோசடி
சென்னையில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை திருட்டு

சென்னை, அமைந்தகரை பிபி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (62). தனியாக வசித்து வரும் லட்சுமி கடந்த சில மாதங்களாக மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதையடுத்து, மூதாட்டி லட்சுமி அமைந்தகரையில் உள்ள அண்ணா சித்த மருத்துவமனையில் மூட்டுவலிக்காக யோகா சிகிச்சை பெற்று வந்தார். நேற்று (செப்.23) வழக்கம்போல் மருத்துவமனைக்குச் சென்ற லட்சுமி, சிகிச்சை முடிந்து அருகே உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்றார். அங்கு வந்த இளைஞர் ஒருவர், லட்சுமியிடம் 5 லட்ச ரூபாய் அரசு காப்பீடு பெற்றுத் தருவதாகக் கூறி, அருகில் உள்ள ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

தங்க நகைகள் அணிந்திருந்தால் அதிகாரிகள் காப்பீடு தரமாட்டார்கள் என்று லட்சுமியிடம் கூறினார். இதை நம்பிய மூதாட்டி, தான் அணிந்திருந்த 6 பவுன் நகையைக் கழற்றி இளைஞரிடம் கொடுத்தார். அதை, அந்த நபர் பேப்பரில் மடித்து மூதாட்டியிடம் கொடுத்து, அவரை உள்ளே அனுப்பி வைத்துள்ளார்.

உள்ளே சென்ற மூதாட்டியிடம் இங்குக் காப்பீடு அலுவலகம் இல்லை என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து லட்சுமி வெளியே வந்து பார்த்துபோது, அந்த இளைஞரைக் காணவில்லை. பின்னர் லட்சுமி, பேப்பரைப் பிரித்துப் பார்த்தால் அதிலிருந்த நகைகளைக் காணவில்லை.

இதுகுறித்து லட்சுமி அமைந்தகரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர். மூதாட்டி கவனத்தைத் திசை திருப்பி நூதன திருட்டில் ஈடுபட்ட டிப்டாப் ஆசாமியைத் தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in