15 ஆண்டுகளாக வலிப்பு நோயுடன் போராடியவருக்கு ரேடியோ தெரஃபி சிகிச்சை!

மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
15 ஆண்டுகளாக வலிப்பு நோயுடன் போராடியவருக்கு ரேடியோ தெரஃபி சிகிச்சை!

15 ஆண்டுகளாக வலிப்பு நோயுடன் போராடிய இளைஞரின் மூளை வாஸ்குலர் குறைபாட்டிற்கு ‘ஸ்ட்ரீயோடாட்டிக் ரேடியோ தெரஃபி சிகிச்சை’ தமிழகத்திலேயே முதல் முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கு பிரத்யே கதிரியக்கச் சிகிச்சை வழங்கக்கூடிய வகையில் பாலரெங்காபுரம் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் செயல்படுகிறது. இந்த சிகிச்சைப் பிரிவில், 15 ஆண்டுகளாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட 24 வயது முனியசிவா என்ற இளைஞர், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், மூளையில் வாஸ்குலர் குறைபாடு (AV Malformaton) இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், அவருக்கு வலிப்பு நோயின் தாக்கம் தீவிரம் அடைந்ததால் உடனடியாக அவருக்கு மூளை ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை அல்லது கதிரியக்க சிகிச்சை வழங்க வேண்டிய இருந்தது.

ஆனால், சிறு வயதில் இந்த அறுவைச் சிகிச்சையைச் செய்தால் பக்க விளைவுகள் வர வாய்ப்புள்ளதால் மருத்துவர்கள், கதிரியக்க சிகிச்சை மூலம் இந்த குறைபாட்டை சரி செய்ய முடிவு செய்தனர். அதனால், அவருக்கு அதிநவீன நேரியல் முடுக்கி (linear accelerator) என்ற கருவி மூலம், ஸ்ட்ரீயோடாட்டிக் ரேடியோ தெரஃபி சிகிச்சை தரப்பட்டது. இந்த சிகிச்சை எதிர்பார்த்த பலனைத் தந்ததை அடுத்து முனிய சிவா இப்போது மெல்ல தேறி வருகிறார்.

இதுகுறித்து மருத்துவமனையில் டீன் ரெத்தினவேலு நம்மிடம் கூறுகையில், “அதிநவீன நேரியல் முடுக்கி கருவி மூலம், வலிப்பு நோய் மற்றும் மூளையில் வாஸ்குலர் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட முனிய சிவாவிற்கு ஸ்ட்ரீயோடாட்டிக் ரேடியோ தெரஃபி சிகிச்சை வழங்கப்பட்டது.

இதுவரை இந்த கருவி மூலம் வழங்கப்படும் ரேடியோர தெரஃபி சிகிச்சையை மற்ற உறுப்புகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் துல்லியமாக புற்றுநோய் செல்களை அழிக்க மட்டுமே பயன்படுத்தி வந்தோம். தற்போது முதல் முறையாக முனியசிவாவின் மூளையில் வாஸ்குலர் குறைபாட்டையும் சரி செய்துள்ளோம். வெறும் 6 நாட்கள் மட்டுமே இந்த கருவி மூலம் ரேடியோ தெரஃபி சிகிச்சை வழங்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின் முனிய சிவா குணமடைந்து நலமாக உள்ளார். இந்த சிகிச்சையானது அரசு மருத்துவ மனைகளில் தமிழகத்திலேயே முதல் முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் தான் நடந்துள்ளது” என்றார்.

இந்த சிகிச்சையை வெற்றிகரமாக செயல்படுத்திய புற்றுநோய் அறுவை சிகிச்சைப்பிரிவு தலைவர் டாக்டர் பாஸ்கர், இணைப் பேராசிரியர் மகாலட்சுமி பிரசாத், துணைப் பேராசிரியர்கள் கோடீஸ், குந்தவை தேவி, ரெத்தினேஷ்குமார், செந்தில்குமார், இயற்பியல் துணைப் பேராசிரியர்கள், தொழில் நுட்பவல்லுநர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு டீன் ரெத்தினவேலு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.