நகராட்சியாக தரம் உயரும் கன்னியாகுமரி

நகராட்சியாக தரம் உயரும் கன்னியாகுமரி

நாகர்கோவில் மாநகராட்சிக்காக 15 கிராம ஊராட்சிகளும், 6 பேரூராட்சிகளும் இணைக்கப்பட உள்ளன. இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருக்கும்நிலையில், இப்போது கன்னியாகுமரி பேரூராட்சியை, நகராட்சியாக மாற்றும் முனைப்பில் இறங்கியுள்ளது அரசு.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி இப்போது பேரூராட்சியாக உள்ளது. ஆண்டு முழுவதுமே இங்கே உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, காந்தி, காமராஜர் மண்டபம், பகவதி அம்மன் கோயில், சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் என கன்னியாகுமரியில் பார்ப்பதற்கும், ரசிப்பதற்கும் ஏராளமானவை இருப்பதால் இங்கே அதிகமானோர் வருகை தருகின்றனர். இந்த சுற்றுலா தலத்தை, இன்னும் ஏராளமான வசதிகளுடன் மிளிரச் செய்யும் நோக்கத்தோடு நகராட்சியாக மாற்றும் முனைப்பில் உள்ளது அரசு. இதற்காக, கன்னியாகுமரி பேருராட்சியை ஒட்டி இருக்கும் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சியையும் இணைத்து நகராட்சியாக்கும் திட்டத்தை வகுத்துள்ளது.

அதேநேரம், இந்தத் திட்டத்தால் கன்னியாகுமரியை நம்பி பிழைப்பு நடத்தும் ஆயிரக்கணக்கானோ ர் பாதிக்கப்படுவார்கள் என அவலக்குரல் எழுப்புகின்றனர். ஏற்கெனவே கரோனா பெருந்தொற்றால் அவ்வப்போது சுற்றுலா பகுதிகள் மூடப்படுகின்றன. இதனால், பேரூராட்சியிடம் வாடகைக்கு ஏலம்பிடித்து எடுத்த கடைகளையே நடத்தமுடியவில்லை. இதனால் மொத்தமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்போது கன்னியாகுமரியை நகராட்சியாக தரம் உயர்த்தினால் கடை வாடகைகள் இன்னும் அதிகரிக்கும். சொத்துவரி, தண்ணீர் வரி ஆகியவை பல மடங்கு உயரும் எனவும் அவலக்குரல் எழுப்புகின்றனர். தனித்தனி பேரூராட்சிகளாக இருக்கும்போதுதான் வளர்ச்சிப்பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தமுடியும் எனவும், அரசோ அதன் நிர்வாக வசதிக்காக பேரூராட்சிகளை இணைக்கும் முடிவில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. அதேசமயம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மத்தியிலும் இதற்கு எதிர்ப்பு வலுத்துள்ளதாகத் தெரியவருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in