‘‘எங்களுக்கு இல்லாத உரிமை அவர்களுக்கா?’’

வனத் துறை கண்காணிப்புக் கோபுரத்துக்கு எதிராக பொங்கும் வன கிராமம்
‘‘எங்களுக்கு இல்லாத உரிமை அவர்களுக்கா?’’
கண்காணிப்பு கோபுரம் அமைந்துள்ள பகுதி

மின்கோபுரம், கேஸ் பைப் லைன், மீத்தேன் வாயு எடுப்பு விவகாரங்களுக்காக விவசாயிகள் போராட்டங்கள் நடைபெறுவதை நிறைய பார்த்து வருகிறோம். வனத் துறை கண்காணிப்புக் கோபுரம் அமைப்பதற்கு எதிராக பொங்கும் பழங்குடி மக்களை பார்த்திருக்கிறோமா? வால்பாறை மலைக்காடுகளில் உள்ள காடாம்பாறை பகுதியில் வசிக்கும் மலைமக்கள், இங்கே வனத் துறை எழுப்பும் வாட்ச் டவர் எனப்படும் கண்காணிப்பு கோபுரம் எழுவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கூட்டம் போட்டு இதற்காக தீர்மானம் போட்டு மாவட்ட வனத் துறை உயர்அதிகாரிக்கும், அரசுக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்கள்.

காடாம்பாறை புலையர் குடியிருப்பு
காடாம்பாறை புலையர் குடியிருப்பு

கோவை மாவட்டம், வால்பாறை வட்டத்துக்கு உட்பட்டது ஆனைமலை புலிகள் காப்பகம். இதில் பொள்ளாச்சி வனக்கோட்டம் பகுதியில் காடாம்பாறையில், மலைவாழ் மக்களான புலையர் இன மக்கள் வசிக்கும் சுமார் 50 குடியிருப்புகள் உள்ளன.

10 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தக் குடியிருப்பு பகுதியை மேம்படுத்தும் நோக்கத்தில் மின் துறையால் மின்கம்பம் நடப்பட்டு, மின் இணைப்பு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டபோது அதை தடுத்து நிறுத்தியிருக்கிறது வனத் துறை. பல்வேறு பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி, விதிமுறைகளை சுட்டிக்காட்டி இதை வனத் துறையினர் தடுத்து நிறுத்தியதால், இப்பகுதியில் ஆங்காங்கே மின்கம்பங்கள் மட்டும் தனியாக நிற்கின்றன.

இந்தச் சூழலில் தற்போது இந்தக் குடியிருப்புக்கு 100 மீ தொலைவில், மேற்கண்ட வனப் பகுதியிலேயே வனத் துறையினரால் ‘வாண்டல் வேட்டைத் தடுப்பு முகாம்’ என்ற வாட்சிங் டவர் (கண்காணிப்பு கோபுரம்) புதியதாக கட்டப்பட்டுள்ளது. இந்த டவருக்கான மின் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் வேடிக்கை என்றவென்றால, மேற்படி கோபுரத்துக்கு செல்லும் மின் இணைப்புக்கான மின் உபகரண கம்பிகள் காடம்பாறை குடியிருப்பு வழியாகத்தான் செல்கின்றது.

காடாம்பாறை குடியிருப்பு
காடாம்பாறை குடியிருப்பு

குடியிருப்பு பகுதியில் அமைந்திருக்கும் மின் கம்பத்துக்கும் தெருவிளக்கு, குடியிருப்பு பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்க பல்வேறு காரணங்களை காட்டி ஆட்சேபணை செய்த வனத் துறையினர், இப்போது வாட்ச் டவருக்கு மட்டும் எப்படி மின்சாரத்தை கொண்டு போகலாம் என்பதே இம்மக்களின் கோபம்.

‘‘மலைமக்கள் அடிப்படை வசதியை பெறுவதையோ, வளர்ச்சிப்பாதைக்கு செல்வதையோ விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது. வனத் துறையினர் காடம்பாறை மலைவாழ் மக்களை மனிதர்களாகவே கருதுவதில்லை!’’ என்று பொங்குகிறார்கள் இப்பகுதி மக்கள்.

பரமசிவம்
பரமசிவம்படம்: கேயெஸ்வி

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆனைமலை பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் பரமசிவம், ‘‘நூற்றாண்டுகளாக, தலைமுறை தலைமுறையாக காடாம்பாறையில் வாழ்ந்து வருபவர்கள் இவர்கள். முன்பு இவர்கள், பழங்குடி பட்டியலினத்தில் இருந்தார்கள். இப்போது பட்டியலின சமூகமாக உள்ளார்கள். இவர்கள் முன்னர் இருந்த ஒரு குடியிருப்பு அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால், 18 ஆண்டுகளுக்கு முன்பு 200 மீ தள்ளியுள்ள இப்பகுதிக்கு குடிபுகுந்தார்கள். இங்குதான் 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்காக மின்சாரம் கொண்டுவர முயற்சி நடந்தது. அதை வனத் துறை தடுத்துவிட்டது. அப்போது என்னென்ன காரணங்களுக்காக மின்சாரத்தை தடை செய்தார்களோ, அந்த பிரச்சனைகள் அப்படியேதான் உள்ளது. இவர்கள் ஊரில் இருந்து 100 மீ தூரத்தில் 3 அடுக்கு மாடிகளை கொண்ட கோபுரத்தை அமைத்து தனக்கே தனக்காக மட்டும் வனத் துறை மின்சாரத்தை கொண்டு போகிறது. சுற்றுச்சூழல் விதிமுறைகளை புறந்தள்ளி, சூழல் சுற்றுலாவுக்காக உருவாக்கப்பட்ட இக்கட்டிடத்திற்கு வன உரிமைச்சட்டம் 2006-ன்படி அருகே உள்ள பழங்குடி கிராமசபைகளின் ஒப்புதல் பெறவேண்டும். இந்த மக்களிடம் வனத் துறை அனுமதி கேட்டபோது, ‘இங்கே கண்காணிப்புக் கோபுரம் வேண்டாம். மலைவாழ் மக்களாகிய எங்களை குறிப்பாக பெண்களை வெளியாட்களும், வனத் துறையினரும் வேடிக்கை பார்க்கும் செயலுக்கு வழிவகுக்க வேண்டாம்!’ என்று சொல்லி மறுத்து விட்டார்கள். அதை மனதில் வைத்து கட்டிடத்தை கட்டி முடித்துவிட்டு, மின் இணைப்பு தரும் வேலையிலும் ஈடுபடுகிறார்கள். அதனால்தான் இதில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்!’’ என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.