வனக் கல்லூரியில் விடுபட்ட பட்டுப்புழுவியல் துறை!

மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
வனக் கல்லூரி மாணவ - மாணவியர் போராட்டம்
வனக் கல்லூரி மாணவ - மாணவியர் போராட்டம்

இக் கல்வி ஆண்டில் விடுபட்டுள்ள பட்டுப்புழுவியல் துறையின் மாணவர் சேர்க்கையை மீண்டும் தொடங்க கோரிக்கை விடுத்து, அரசு வனக் கல்லூரியின் பட்டுப்புழுவியல் துறை மாணவ-மாணவியர் கல்லூரிக்குள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ளது அரசு வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம். இங்கு பயிலும் பட்டுப்புழுவியல் துறை (இளநிலை அறிவியல்) பட்டப்படிப்பு 2011-ம் ஆண்டு, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் தொடங்கப்பட்டது.

பின்னர் இத்துறை, 2014-ம் ஆண்டில் இப்பல்கலைகழகத்தின்கீழ் இயங்கும் மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு இட மாற்றம் செய்யப்பட்டது. வெறும் துறையாக இயங்கும் பட்டுப்புழுவியல் துறையை கல்லூரியாக தரம் உயர்த்தவே இந்த மாற்றம் செய்யப்படுவதாகக் கூறப்பட்டது. அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன.

முதல்வர் சமாதான பேச்சுவார்த்தை
முதல்வர் சமாதான பேச்சுவார்த்தை

இந்நிலையில், 2021 – 2022-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில், இளநிலை அறிவியல் (B.sc., sericulture) படிப்பான பட்டுப்புழுவியல் இடம் பெறவில்லை. இதனால் இத்துறையின்கீழ் பயின்று வரும் மாணவ மாணவியர், பெற்றோர் மற்றும் துறை சார்ந்த பேராசிரியர்கள் துணை பேராசிரியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தற்காலிகமாக 2 ஆண்டுகளுக்கு இத்துறை முடக்கப்பட்டுள்ளது என பல்கலைகழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் தங்களது எதிர்காலம் குறித்து அச்சத்தில் உள்ளனர் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டபடிப்பு பயின்று வரும் பட்டுப்புழுவியல் துறை மாணவ மாணவியர்.

இதனால், இத்துறையின்கீழ் பயிலும் மாணவ மாணவியர் 77 பேர் இன்று கல்லூரி வளாகத்தினுள் உள்ள பட்டுப்புழுவியல் துறை கட்டிடத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘மாணவர் சேர்க்கையில் மீண்டும் பட்டுப்புழுவியல் துறையை இணைக்க வேண்டும், பட்டு வளர்ப்பு துறையை ஊக்குவிக்க வேண்டும், இப் படிப்பிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்’ என அவர்கள் தொடர் முழக்கமிட்டனர்.

இதையடுத்து அரசு வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் பார்த்திபன், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவர்களது கோரிக்கைகள் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். ஆனாலும், மாணவ மாணவியர் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதுகுறித்து வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தரப்பில் கேட்டபோது, “பட்டுப்புழுவியல் துறைக்கு என அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, வனக் கல்லூரியில் இப்படிப்பிற்கு போதிய மாணவர்கள் சேர்க்கை இல்லாத காரணத்தினாலும், மேட்டுப்பாளையம் பகுதியில் பட்டு வளர்ப்பு தொடர்பான தொழில் முக்கியத்துவம் இல்லாத காரணத்தினாலும், பட்டு வளர்ப்பு மற்றும் ஆராய்ச்சி அதிகமுள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி போன்ற பகுதிக்கு இதனை மாற்ற திட்டமிட்டுள்ளது. அதன் பேரில் மாற்று ஏற்பாட்டிற்கான வசதி கருதி தற்காலிகமாக, வரும் 2 கல்வியாண்டில் இத்துறை சார்ந்த மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது” என்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in